OUR LADY OF SNOWS - PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்
கோவில்பட்டிக்கு வடகிழக்குத் திசையில். 14 கி.மீ.தொலைவில் காமநாயக்கன்பட்டி இருக்கிறது. இங்கு, நாடார் மற்றும் நாயக்கர் இன மக்கள் வாழ்கின்றனர். 16-ஆம் நூற்றாண்டு (சுமார் 1600-ஆம் ஆண்டு) கயத்தாறு எனும் ஊரில் சுமார் 45 குடும்பங்கள் ஞானஸ்நானம் பெற்று கத்தோலிக்க மதத்தை பின்பற்றினார். அதன்பிறகு, புனித அருளானந்தர் காமநாயக்கன்பட்டி மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, 1685-ஆம் ஆண்டு, காமநாயக்கன் பட்டியில் கத்தோலிக்கக் கோயில் ஒன்றைக்கட்டினார். 1688-ஆம் ஆண்டுக்குப்பின், காமநாயக்கன்பட்டி கிறித்தவப் பாதிரியார்களுக்கு ஒரு நிரந்தர இருப்பிடமாக, மத பணிகளைச் செய்திட அமைந்தது. புனித தந்தை ஜோசப் கான்ஸ்டென்டைன் பெஸ்கி (வீரமாமுனிவர்), காமநாயக்கன் பட்டியின் 7வது பங்குத் தந்தையாக சேவை செய்தார்.
காமநாயக்கன்பட்டி என்னும் பெயர் ஒரு மன்னனின் பெயரிலிருந்து வந்தது. இரு சகோதரர்கள் எட்டப்ப நாயக்கர் மற்றும் காம நாயக்கர் இந்த இடங்களை 1600ஆம் ஆண்டுவாக்கில் ஆண்டு வந்தனர். ஒரு கிராமம், கமநாயக்கன் பட்டி என்றும், அதன் அருகாமையில் உள்ள கிராமம் எட்டுநாயக்கன்பட்டி என்றும் பெயரிடப்பட்டன.
17ஆம் நூற்றாண்டில் (1700-29) தொடர்ந்து வேதகலாபனை நடந்த காரணத்தால், காமநாயக்கன்பட்டி முற்றிலும் அழிக்கபட்டுவிட்டது. இப்போதும் கூட அழிக்கப்பட்ட இடம் கல்லறையின் வடக்குப்பக்கத்தில் காணமுடியும். வேதகலாபனை நடந்த காலத்தில் மன்னன் செகவேராமக்கச்சில் எட்டப்ப நாயக்கர்,1665 இல் கல் ஒன்றை நிறுவி, கத்தோலிக்கர்களைப்பகைவர்களிடமிருந்துக் காப்பாற்றினர் . மேற்கூறபட்ட கல்,மேற்படி கோயிலின் முன்பக்கத்தில் அமைக்கபட்டுள்ளது. கிருஸ்தவர்களுக்கெதிராக இழைக்கப்பட்ட துன்பம் மிகக் கடுமையானது, அவர்கள் மீண்டும் வாழ, பாதுக்காப்பு ஏதுமில்லை. இது, மக்களை வேறிடம் பெயர்ந்து செல்லுமாறு தூண்டியது. ஆகவே, காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த திரு. சுவாமியடியான் திருப்பாப்பு நாடார் மற்றும் அவர் தம் குடும்ப உறுப்பினர்கள் நால்வர், மறவந்தட்டு, இப்போது மறவன்குடியிருப்பு என அழைக்கப்படும் இடத்திற்கு, இடம் பெயர்ந்து வந்தனர்.
அந்தக்காலத்தில், மறவன் தட்டில் சில திருடர்களும், கள்வர்களும் தங்கியிருந்தனர். திரு. சுவாமியடியான் திருப்பாப்பு நாடார் மற்றும் குடும்ப உறுப்பினர் நால்வரும், அவர்களுடன் சண்டையிட்டு, அவர்களை துரத்தியடித்தனர். இறுதியாக, திரு.சுவாமியடியான் திருப்பாப்பு நாடார் அவர்தம் உறைவிடத்தை மறவன் தட்டில் நிலைநாட்டினார். தற்போது அது மறவன்குடியிருப்பு என அழைக்கப்படுகிறது.
திரு. சுவாமியடியான் திருப்பாப்பு நாடார் மற்றும் அவர்தம் குடும்பஉறுப்பினர்கள் மறவன்குடியிருப்பிற்கு 1781-ஆம் ஆண்டு வந்து சேர்ந்தனர். அவர், பக்கத்து ஊரான கலசமிறக்கிக் குடியிருப்பு எனும் ஊரைச்சார்ந்த பெரிய நாச்சி என்ற பெரிய நாடாச்சி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டார். அவர்களுக்கு, குழந்தைப் பேறு இன்மையால் அவர்தம் சகோதரின் குழந்தைகள் மூவரையும் மற்றும் உறவினர் ஒருவரின் குழந்தையையும். காமநாயக்கன்பட்டியிலிருந்து தத்தெடுத்து, அவர்களை, தமது வாரிசுகளாக்கினார். இவர்கள், இந்த கிராமத்தின் தோற்றத்திற்குக் காரணமானவர்கள்.
திரு. சுவாமியடியான் திருப்பாப்பு நாடார் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்கள் நால்வரும், மறவன் குடியிருப்பையும் மற்றும் அருகாமையில் உள்ள இடங்களையும், தமது உடைமையாக்கிக் கொண்டனர். இவ்வளவு பெரிய நிலப்பரப்பையுடையதாலும், பெரிய அந்தஸ்து ஏற்பட்டதாலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு வரி செலுத்தி வந்தார். எனவே 1829-ம் ஆண்டு திருவிதாங்கூர் மகாராஜா சுவாதி திருநாள் இராமவர்மா மற்றும் திருவட்டார் அம்மவீடு குடும்பத்தைச் சேர்ந்த பனப்பிள்ளை அம்மா ஸ்ரீமதி ஆய்க்குட்டி நாராயணிப்பிள்ளை கொச்சம்மா ஆகியோர் திருமணத்திற்கு அழைக்கப்பட்டார். திரு.சுவாமியடியான், அந்தத் திருமண விழாவில் கலந்து கொண்டு, 1001 பவுன் தங்க காசு அன்பளிப்பாக வழங்கினார். அக்காலத்தில் இது ஒரு பெரிய அன்பளிப்பாகும். எனவே, திருவிதாங்கூர் மகராஜா திரு.சுவாமியடியான் திருப்பாப்பு நாடாரை வரவழைத்து பாராட்டி திருவனந்தபுரத்தில் 5 காணி நிலத்தை வெகுமதியாக அளித்ததுடன் "திருமுகம் பார்ப்பு" என்ற சிறந்தப் பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். இதன் அர்த்தம் என்னவென்றால், இந்த பட்டத்தைப் பெற்றவர்கள், மகாராஜாவை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நேரில் சந்திக்க முடியும் இச்செய்தி, திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானம், திருவனந்தபுரத்தில் உள்ள ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.
திருமுகம்பார்ப்பு என்பதின் குறுகிய பெயர் "திருப்பாப்பு" என்பதாகும். இதன் பின்னர் தான், திரு.சுவாமியடியான் நாடார் என்பது திரு.சுவாமியடியான் திருமுகம் பார்ப்பு நாடார் என்றும் சுருக்கமாக. திரு.சுவாமியடியான் திருப்பாப்பு நாடார், என்றும் அழைக்கப்பட்டார்.
காமநாயக்கன்பட்டியிலிருந்து மறவன்குடியிருப்புக்கு குடிபெயர்ந்து வந்ததற்கான சில சான்றுகளும், செய்திகளும் :-
1. ஒரு குறிப்பிட்ட பழக்க வழக்கம் மற்றும் நம்பிக்கை கொண்ட மக்கள் ஓரிடத்தினின்றும் மற்றோரிடத்திற்குக் குடி பெயர்ந்து செல்லும் போது, அவர்கள், தங்களுக்குரிய கடவுளரையும் தங்களுடன் எடுத்துச் செல்வார்கள். அதேபோன்று, திரு.சுவாமியடியான் திருப்பாப்பு நாடார் மரத்தினால் செய்யப்பட்ட பரலோக மாதா சுரூபத்தை (The Statue of Our Lady of Assumption) காமநாயக்கன்பட்டியிலிருந்து, மறவன் குடியிருப்பிற்குத் தம்முடன் கொண்டு வந்தார். அந்த மரத்தினாலான சுரூபம் இப்போது கல்லறையிலுள்ள கோயிலில் (Chapel in the cemetry) வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது
2. ஒரு பிரபல நாடகம் "கல்லறை வாசாப்பு" என்ற பெயரில், காமநாயக்கன்பட்டியிலும் மற்றும் மறவன்குடியிருப்பில் 1965-வரை நடைபெற்று வந்தது. இதுதான் காமநாயக்கன்பட்டி மற்றும் மறவன் குடியிருப்பு, இவற்றிற்கிடையேயுள்ள ஒற்றுமையினைக் காட்டுகிறது
3. திரு. சுவாமியடியான் திருப்பாப்பு நாடார். தனது 84-ஆம் வயதினில், 1838-ஆம் ஆண்டு காலமானார். கல்லறையிலுள்ள கோயிலின் பின்பக்கம் அவர்தம் கல்லறை இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஈஸ்டர் மற்றும் கிறிஸ்துமஸ் திருநாளன்று, இரவு நள்ளிரவு திருப்பலி முடிந்தவுடன் ஊர் நிர்வாகிகளுடன், ஊர் மக்கள் மேளதாள வாத்தியங்களுடன் பெரிய கோவிலிலிருந்து கல்லறை வரை ஊர்வலமாகச் சென்று கல்லறை கோவிலில் பிரார்த்தனை செய்தபின்பு திரு.சுவாமியடியான் திருப்பாப்பு நாடார் மற்றும் அவரது வாரிசுகளின் கல்லறைகளிலுள்ள சிலுவைக்கு தேங்காய் எண்ணெயால் பூசி, பின்னர் மாலையணிவித்து செபம் செய்வது இன்றுவரை பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊர் மக்கள் தங்களது முன்னோர்களுக்கும், உறவினர்களின் கல்லறைகளுக்கும் மாலையணிவித்து பிரார்த்தனை செய்வர். மற்றொரு கல்லறையும் அங்கு காணப்படுகிறது, இது அன்னாரின் வாரிசுகளில் ஒருவரான திரு.சவரிமுத்து நாடான் என்பவரின் கல்லறை. இதன்மீது பொறிக்கப்பட்டுள்ள வாசகம் தேவநாகிரி மொழியில், அவர் பெயர் காணப்படுகிறது. இப்போது மேற்கண்ட வாசகம் உள்ள கல், கல்லறை கோயிலில் புதைக்கப்பட்டுள்ளது
மறவன்குடியிருப்பு, நாகர்கோயில் நகராட்சியின் ஒரு பகுதியாகும். இது, நாகர்கோயிலிலிருந்து தெற்கே 3 கி.மீ, தொலைவில் உள்ளது. நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமை இடம் ஆகும். ஆதியில் கன்னியாகுமரி மாவட்டம், முன்னாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகும். இந்தியா, பிரிட்டனிலிருந்து, 1947-ல் சுதந்திரம் பெற்றபின் சுமார் 10 ஆண்டு காலம் வரை திருவிதாங்கூர் சமஸ்தானம் கேரள மாநிலமாகவும், அதன் இராஜா திருவிதாங்கூர் கேரளாவின் கவர்னராகவும் (ராஜபிரமுக்) திகழ்ந்தார். 1956-ஆம் ஆண்டில், கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது. இதன் தொடக்கக் காலத்தில், இந்த நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களும், நாஞ்சில் நாடு என அழைக்கப்பட்டது.
மறவன் குடியிருப்பு ஊரின் எல்லையாவது : மேற்கில் வட்டக்கரை கிராமம், வடக்கில் பட்டகசாலியன் விளை மற்றும் கலைநகர் (கலசமிறக்கிக் குடியிருப்பு), கிழக்கில் கீழமறவன்குடியிருப்பு மற்றும் தெற்கில், வண்ணான்விளை இவற்றை எல்லைகளாகக் கொண்டிருந்தது. பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடங்கும் ஒரு கால்வாய், மறவன் குடியிருப்பு கிராமத்தை, இரண்டாகப் பிரித்து, ஒரு பக்கம் நகராட்சியின் கீழும் மறுபக்கம், ஊராட்சியிலும் அமைந்துள்ளது. இந்த கிராம மக்களில் பெரும்பாலோர் விவசாயிகள், தென்னை வளர்ப்போர், மற்றும் மர வியாபாரிகளாவர்.
ஆதியில், கிராம மக்கள் ஊரில் தெற்குப்பக்கம் அமைந்திருக்கும் ஊற்றுக்களிலிருந்து, குடிநீரைக் கொண்டு வந்தனர். எனவே, கிராம மக்கள், ஊரின் நடுவில், இரண்டாவது கட்டப்பட்ட கோவிலின் முன்பக்கத்தில், குடிநீருக்கென கிணறு ஒன்றைத் தோண்டினர். இது கிராம மக்களால் 1904 முதல் 1914-ஆண்டு முடிய சுமார் 10 ஆண்டுகளாக 85 அடி ஆழத்தில் தோண்டி குடி தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். தண்ணீர் சுவையாக இருந்ததுடன், கிராம மக்களின் தேவைகளையும் மற்றும் அண்டைக் கிராம மக்களின் தேவையையும் நிறைவு செய்தது.