Maravankudieruppu Logo
Maravankudierupppu Church logo
Maravankudierupppu Church logo
OUR LADY OF SNOWS - PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்

கோட்டாறு மறைமாவட்டம்


கோட்டாறு மறைமாவட்டம்

கோட்டாறு மறைமாவட்டம் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ளது. இதில் இருந்து 2014 இல் குழித்துறை மறைமாவாட்டம் பிரிந்து புதிய மறைமாவாட்டம் ஆக உருவாக்கப்பட்டது.

கோட்டாறு மறைமாவட்டம் வரலாறு

கொல்லம் மறைமாவட்டம் இந்தியாவின் முதல் கத்தோலிக்க மறைமாவட்டம் ஆகும். இம் மறைமாவட்டம் 09-08-1329 ம் நாள் நிறுவப்பட்டது.

பாரம்பரியப்படி புனித தோமையார் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் 7 கோயில்களைக் கட்டினார். அதில் இரண்டாவது கோயில் கொல்லம் மறை மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு என்ற இடத்திலுள்ள ஆரப்பள்ளி என்ற கோவிலாகும். இந்தக் கோவிலை கி.பி.57ம் ஆண்டு புனித தோமையார் கட்டினார். கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சேர நாட்டரசன் உதயன் சேரலாதன் என்பவரது மகன் நெடுஞ்சேரலாதன் ஆட்சி காலத்தில் இந்த கோவிலுக்கு  திருவிதாம்கோடு ஆரப்பள்ளி அல்லது தோமையார் கோவில் என பெயர் சூட்டினார்.

கொல்லம் மறைமாவட்டம் உதயம்

பிரான்ஸ் நாட்டு தோமினிக்கன் துறவி ஜோர்தானுஸ் கட்டலானி ( Jordanus Catalani ) என்பவரை, போப்பாண்டவர் 22ம் அருளப்பர் (Pope John XXII) 29-08-1329ம் ஆண்டு  கொல்லம் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயராக நியமித்தார். இந்த மறைமாவட்டம்; இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பர்மா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் அதிகார எல்லை கொண்டிருந்தது.

பிரான்ஸ் நகரத்திலுள்ள புனித லாரன்சோ என்ற இடத்தைச் சேர்ந்த ஜாண் டி மாரிக்ஞாலி (John De Marignolli) என்பவர் பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்தார். பின்னர் கி.பி.1338ம் ஆண்டு ஆயராக  அபிஷேகம் செய்யப்பட்டு, சீனாவின் பொறுப்பாளராக போப்பாண்டவர் 12ம் ஆசீர்வாதப்பரால் (Pope Benedict XII) நியமிக்கப்பட்டார்.(1334-1342). பின்னர் சீனாவில் வேத போதகம் செய்து பிளாரன்ஸ் திரும்புகையில் கொல்லத்தில் தங்கி ஓராண்டு வேத போதகம் செய்தார். மேற்சொன்ன கொல்லம் மறைமாவட்ட  ஆயர் ஜோர்தானுஸ் கட்டலானி என்பவரால் கட்டப்பட்ட புனித வறுவேல் கோவிலில் (St. George's Church) ஒரு வருடம் வேத போதகம் செய்தார். இந்த சமயம் அவர் கன்னியாகுமரி முதல் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் சென்று வேத போதகம் செய்து வந்தார்.

பின்னர் கி.பி.1534 வரை கொல்லத்தில் ஆயர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே இப்பகுதி கோவா மறை மாவட்டத்திற்குட்பட்டிருந்தது. கோவா மறைமாவட்டம் 04-02- 1557ல் உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது. எனவே அதைத் தொடர்ந்து கொச்சி மாவட்டமும் அதன் பகுதியான கொல்லமும் கோவா உயர் மறைமாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டது.

புனித சவேரியாரின் மறைப்பணி

போர்ச்சுக்கீசியர் வேத போதகத்துக்காக கொல்லம் வந்தபோது, குறிப்பாக கன்னியாகுமரி கடற்கரையோரம் வேத போதகம் மேற்கொண்டார்கள். இவர்களில் புனித சவேரியாரும் இந்த பகுதியில் வந்து வேத போதகம் செய்தார். இவரது கடும் முயற்சியினால், 1536 முதல் 1537 வரை  பரவர் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பகுதியினர் கிறிஸ்தவர்களாக மதம் மாறினார்கள். பின்னர் 7 ஆண்டுகளுக்குப் பின் திருவனந்தபுரத்திலுள்ள, பூவார் என்ற இடம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம் என்ற கிராமம் வரையில் உள்ள கடற்கரை கிராமங்களிலுள்ள முக்குவர் சமுதாயத்தினர், கிறிஸ்தவர்களாக மதம் மாறினார்கள்.

குளச்சல் போர்

டச்சுக்காரர்களால், போர்ச்சுக்கீசியர் 1661ம் ஆண்டு  தோற்கடிக்கப்பட்டார்கள்.  டச்சுக்காரர்கள் கொல்லம் முழுக்க தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார்கள். கத்தோலிக்கர்களை மிகக் கொடுமை படுத்தினார்கள். கத்தோலிக்க கோயில்கள் அழிக்கப்பட்டன. கிறிஸ்தவர்களுக்கு இது இருண்ட காலம் ஆகும்.  இந்நிலை 1741 வரை நீடித்தது. பின்னர் 1741ல் நடைபெற்ற பிரசித்தி பெற்ற குளச்சல் போரில்,  டச்சுக்காரர்கள் திருவிதாங்கூர் மகாராஜாவால் தோற்கடிக்கப்பட்டனர்.  எனவே டச்சுக்காரர்கள் கொல்லத்தை விட்டு வெளியேறினார்கள். பின்னர் திருவிதாங்கூர் மகாராஜா பால ராம வர்மா குலசேகர பெருமாள் ஆட்சியில் பிரதம மந்திரியாக கி.பி.1802 முதல் 1809 வரை வேலுத்தம்பி தளவாய் நியமிக்கப்பட்டார். இவர் காலத்திலும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு இருண்ட காலமாகவே இருந்தது. கிறிஸ்தவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.

புனித தேவசகாயம்

1622ம் ஆண்டு, வத்திக்கானில், போப்பாண்டவரால் விசுவாச மறைபரப்பு ஆணையம்   ஆரம்பிக்கப்பட்டது. எனவே, கொல்லம் மறைமாவட்டத்திற்குட்பட்ட  ஊர்களிலும் மற்றைய ஊர்களிலும் மறைபரப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி  வெள்ளாளர் மற்றும் நாயர் சமுதாயத்தினரிடையே கிறிஸ்தவத்தை போதிக்க ஆர்வம் காட்டப்பட்டது. இதனால் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவினர். இவர்களில்  முக்கியமானவர் திருவிதாங்கூர் இராணுவத்தில் மிக முக்கிய பொறுப்பு வகித்த நீலகண்ட பிள்ளை என்ற தேவசகாயம் பிள்ளை ஆவார். திருவிதாங்கூர் மகாராஜா எவ்வளவோ முயற்சி செய்தும் தேவசகாயம் பிள்ளையை மறுபடியும் இந்துமதத்திற்கு கொண்டுவர முடியவில்லை.  தேவசகாயம் பிள்ளைக்கு 3 ஆண்டுகளாக சித்திரவதை செய்தனர். ஆனால் அவர் மனம் மாறவில்லை. எனவே, இறுதியில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியிலுள்ள காற்றாடி மலை என்ற மலையில் அவரை14-01-1752-ம் நாள் சுட்டுக் கொன்றார்கள். கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் என்ற இடத்தில் புனித சவேரியார் கட்டிய கோவிலில், தேவசகாயம் பிள்ளையின் உடல் அடக்கம்  செய்யப்பட்டது. தேவசகாயம் பிள்ளைக்கு Blessed என்கிற அருளாளர் பட்டம் -----போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் அவர்களால் வழங்கப்பட்டது. பின்னர் .............புனிதர் பட்டம் (Saint) வழங்கப்பட்டது.

போப் ஆண்டவர் பதினாறாம் கிரகோரியார் (Pope Gregory XVI) 24-04-1838ல் முல்தா பிரேகிளேர் (Bull Multa Praeclare)  என்னும் பேராணை மூலம்  கொச்சி மற்றும் கொல்லம் மறை மாவட்டங்கள் மலபார் (வீராபொலி) மறைமாவட்டத்துடன் இணைத்தார். பின்னர் மலபார், (வீராப்பொலி) மங்களூர் மற்றும் கொல்லம் இந்த மூன்றும் தனிப்பகுதிகளாக்கி 12- 05-1845ல்  வத்திக்கான் உத்தரவு பிறப்பித்தது. அரேபிய கடல் பகுதி முதல், மேற்கு தொடர்ச்சி மலை வரையும் மற்றும் கன்னியாகுமரி முதல் முதல் பம்பா நதி வரையில் பெல்ஜிய கார்மேல் வேத போதக சபையில் கீழ் வந்தது. மறுபடியும், கொல்லம் மறைமாவட்டம் கன்னியாகுமரி முதல் பம்பா நதி வரையும் பெல்ஜிய கார்மல் வேத போதக சபையின் கீழ் வந்தது. மறுபடியும் 01-09-1886ம் ஆண்டு கொல்லம் மறைமாவட்டம் கன்னியாகுமரி முதல் பம்பாநதி வரையும் எல்கைகளைக் கொண்டு வீராப்பொலி உயர் மறைமாவட்டம்  உதயமானது.

கி.பி.18ம் நூற்றாண்டில் இப்பகுதியில்  நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கத்தோலிக்கராக மதம் மாறினார்கள்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் வேங்கோடு மற்றும் காரங்காடு ஆகிய இரண்டு பகுதிகளும் வேத போதகம் செய்ய முக்கிய இடங்களாக செயல்பட்டன. கி.பி.1886-ல் கொல்லம் மறைமாவட்டம் வடக்கில் மாவேலிக்கரை வரையும் தெற்கில் கன்னியாகுமரி வரையிலும் எல்கையைக் கொண்டிருந்தது. தென்பகுதியில் கோட்டார் முக்கிய நிலையமாக செயல்பட்டது.

ஸ்விட்சர்லாந்தில், மிக பணக்கார குடும்பத்தில் பிறந்த கார்மேல் சபையைச் சார்ந்த சங். மரிய அலாய்சியுஸ் பென்சிகர், கொல்லம் ஆயராக நியமிக்கப்பட்டார். இவர் மிகுந்த பக்தியுள்ள, எளிமையானவர். கொல்லம் மறைமாவட்ட தென் பகுதியான கோட்டாறு மறைமாவட்டம் உதயமாவதற்கு காரணகர்த்தா இவரே.

கோட்டாறு மறைமாவட்டம் உதயம்

மக்களின் முன்னேற்றத்திற்கு, கல்வி மிக முக்கியமானது, என்பதை உணர்ந்த ஆயர் பென்சிகர், பல கல்வி நிலையங்களை,  மறைமாவட்டத்தில் உருவாக்கினார். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தை, தனியாக பிரித்தது கோட்டார் மறை மாவட்டம் உருவாக்கிட ஆவன செய்து 26- 05-1930 சங். லாரன்ஸ்  பெரைரா, ஆயராக நியமிக்கப்பட்டு, கோட்டாறு மறைமாவட்டம் உருவானது. ஆயர் லாரன்ஸ் பெரைரா 05-01-1938-ல் கடவுளில் நித்திரையானார்.

  • சேசு சபையைச் சேர்ந்த சங். தாமஸ் ரோக் ஆஞ்ஞிசாமி அவர்கள் 1939-ல் கோட்டாறு ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டார். கி.பி.1956-ம் வருடம் கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்திலிருந்து பிரிந்து தமிழ் நாட்டுடன் இணைந்தது.
  • 1963இல் வீராப்பொலியின் உயர்மறை மாவட்டத்திலிருந்து கோட்டாறு மறைமாவட்டம் பிரிந்து, மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் வந்தது. ஆயர் ஆஞ்ஞிசாமி காலத்தில் கோட்டாறு மறைமாவட்டத்தில் மிகப் பல முன்னேற்றங்கள் காணப்பட்டது. மறைபரப்பு பணி, பங்கு தளங்கள், கல்விப்பணி, கல்லூரிகள், பள்ளிகள் என பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
  • கி.பி.1971-ம் ஆண்டு கும்பகோணத்தைச் சேர்ந்த சுவாமி மரியானுஸ் ஆரோக்கியசாமி, கோட்டாறு  ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டார். பின்னர் 1989-ம் ஆண்டு மதுரை பேராயராக நியமிக்கப்பட்டார்.
  • கி.பி.1989-ல் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சங். லியோன் தர்மராஜ் கோட்டாறு ஆயராக நியமிக்கப்பட்டு 16-01-2007-ம் ஆண்டு கடவுளில் நித்திரை அடைந்தார்.
  • 24-09- 2008-ம் ஆண்டு கும்பகோணத்தில் ஆயராக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் கோட்டாறு ஆயராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
  • கி.பி. 1930-ல் 95,000 கத்தோலிக்கர்களை கொண்டு 25 பங்கு தளங்களையும் 32 குருக்களுடன் கோட்டாறு மறைமாவட்டம் உதயமானது. கி.பி. 2014-ம் ஆண்டு கிட்டத்தட்ட 5,43,789 கத்தோலிக்க மக்களுடன்181 பங்கு தளங்களையும் கொண்டு, மிகப் பல கல்வி நிறுவனங்கள் பொது சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு, திறம்பட செயல்பட்டு வந்தது.
  • இந்நிலையில் கோட்டாறு மறைமாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிதாக குழித்துறை மறைமாவட்டம் உருவானது.  கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சலேசிய சபையின் குருவானவர்,  சங். ஜெரோம் தாஸ் வறுவேல் ஆயராக 24-02- 2015ம் ஆண்டு அபிஷேகம் செய்யப்பட்டு குழித்துறை மாவட்டம் உருவானது.
  • கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியஸ் ஓய்வு பெற்றதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குருவானவர் சங். நசரேன் சூசை என்பவர் ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டு, கோட்டார் மறை மாவட்ட ஆயராக 29-06-2017ம் ஆண்டு  பொறுப்பேற்றுக்கொண்டார்.

தற்போதைய நிலவரப்படி, கோட்டார் மறைமாவட்டம், 93 பங்கு தளங்களுடன்,  217 மறைமாவட்ட குருக்களையும், 33 துறவற சபையை சார்ந்த குருக்களையும், 15 துறவற சகோதரர்களையும்,  470 அருள் சகோதரிகளையும் கொண்டு, 2,62,889 கத்தோலிக்க விசுவாசிகளுடன் கோட்டாறு  மறை மாவட்டம் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக அனைத்து சமூக மக்களுடனும்,  மத நல்லிணக்கத்துடனும் சமாதான முறையில் அமைதியான சூழ்நிலையில் கோட்டார் மறைமாவட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

கொல்லம் இந்தியாவின் முதல் மறை மாவட்டம்.
இந்தியாவின் முதல் மறை மாவட்டம் 9 ஆகஸ்ட் 1329 ல் ஏற்படுத்தப்பட்டது.
கோட்டாறு மறை மாவட்டம் 26 மே 1930 ல் ஏற்படுத்தப்பட்டது.

Foot notes

கோட்டாறு மறைமாவட்டம் வரலாறு by Thiru Joseph Singh

Church and their servies in Nagercoil by Thiru Chellathurai

Kottar marimavata punitharkal vazhipadum vazhakarukalum by Ms Tamil Sajalaa V S

The lay people s involvement in Church activities in kanyakumari district by Ms Doral

Home | History | Religious Profession | Parish | Gallery | Music | Blog | Genealogy | Conatct Us
 
© Copyright . MARAVANKUDIERUPPU. All rights reserved.