OUR LADY OF SNOWS - PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்
கொல்லம் மறை மாவட்டத்திலிருந்து பிரிந்த கோட்டாறு மறை மாவட்டத்திலுள்ள கத்தோலிக்கர்கள் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர் புனித தோமையார் மற்றும் சேசுசபை குருவான புனித சவேரியார் ஆகியோரால் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். ஆனால், மறவன்குடியிருப்பு மக்கள் வேறுபட்ட பின்னணி உடையவர்கள். இங்குள்ள முன்னோர் காமநாயக்கன்பட்டி பங்கு தந்தையாக இருந்த புனித அருளானந்தரால் (St. John De Britto) ஞானஸ்நானம் பெற்றவர்களாவர்
முதல் கோவில் :- பண்டைய நாட்களில், கத்தோலிக்கர்கள்
வெகு சிலராக, சிறு தொகுதியாக வாழ்ந்து வந்தமையால் கோவில் ஒன்றைக்
கட்டுவதற்கு இயலாத
நிலையில் இருந்தனர். எனவே, அவர்கள் குருசடி என்ற சிறிய கோயிலை
அமைத்து, தமது ஆன்மீகத்
தேவைகளை நிறைவு செய்து கொண்டனர். அதைப்போன்று, மறவன்
குடியிருப்பிலும் உள்ளவர்கள்
கல்லறையில் ஒரு சிறிய கோயிலைக்கட்டி, அதனை பரலோக மாதாவுக்கு (Our
Lady of Assumption)
அர்ப்பணம் செய்தனர். அந்த கோவிலிலுள்ள மரத்தினாலான மாதா சுரூபம்
காமநாயக்கன்பட்டியிலிருந்து
கொண்டு வரப்பட்டதாகும்.
1920-ஆம் ஆண்டு வரை, கோயிலில் திருப்பலி நடைபெறவில்லை, ஆனால் பிரார்த்தனைகள் மட்டும் உபதேசியாரால் நடத்தப்பட்டது. இவர், கோவிலைப் பராமரித்து வந்தார், அங்கு கிடைக்கப் பெற்ற காணிக்கையிலிருந்து, கோவிலைப் பராமரித்ததுடன் தனது தேவைகளுக்கும் அதை பயன்படுத்திக் கொண்டார். புன்னை எண்ணெய் விளக்கினை ஏற்றி வைத்து, பிரார்த்தனைச் செய்வார். இதனால் ஊர் மக்களுக்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன. எனவே, நோயினால் அவதியுற்றோர், கோவிலில் இடைவிடாது செபம் செய்து வந்தனர். இரவு வேளையில் கல்லறையிலுள்ள கோயிலில், நோயிலிருந்து சுகம் பெற வேண்டி அங்கேயே தூங்குவதும் உண்டு. மக்கள் தொகை மெல்ல மெல்லப் பெருகவே, இந்தக் கோயிலில் இடம் போதாமல் போயிற்று. எனவே, மேலும் ஒரு கோவில் கட்ட அவர்கள் முடிவு செய்தனர்.
இரண்டாவது கோவில் கிராமத்தின், மையத்தில் அமைந்திருந்தது. நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் அங்கு உட்கார்ந்து செபம் செய்ய, வழிபாடு நிறைவேற்றக் கூடிய விதத்தில் அந்தக் கோவில் கட்டப்பட்டது. கோவிலில் பீடத்தில், புனித கன்னிமரியாள், குழந்தை ஏசு மற்றும் புனித சூசையப்பர் சுரூபங்கள் வைக்கப்பட்டிருந்தன. புனித கன்னிமரியாள் சுரூபம் தற்போது புனித நல்லமன மாதா கியூரியாவில் உள்ளது. கோவிலின் முன்பக்கத்தில் ஒரு மணி இருந்தது, இது அதிகத் தொலைவில் கேட்காது.
எனவே, ஊர் மக்கள் ஒரு பெரிய மணியை வாங்கினர், ஆனால் மணியினைத் தாங்கிக் கொள்ளும் போதிய வலிமை கோவிலில் இல்லை. எனவே, அவர்கள் அருகிலுள்ள புளியமரத்தில் கட்டித் தொங்க விட்டனர். இப்போது, அந்த மணி, தற்போதைய தஸ்நேவிஸ் மாதா கோயிலில் பயன்படுத்தப்படுகிறது. 1820-ஆம் ஆண்டு முதல் இரண்டாம் கோவில், திறந்த வெளி பள்ளிக் கூடமாக பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் மணலின் மீது எழுதிப் பாடம் கற்பிக்கப்பட்டது. புனித மரியன்னை தொடக்கப்பள்ளி கட்டப்பட்டு, பிரதான சாலைக்கு 1908ல் கொண்டு செல்லப்பட்ட போது, அது கோவிலாக மாற்றம் செய்யப்பட்டது. எனவே, கல்லறை கோயிலில் நடைபெற்ற வழிபாடு, இரண்டாம் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அடிப்படையில், இது ஒரு குருசடியாகப் பயன்படுத்தப்பட்டது. முக்கியமாக, இது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது.
1. மாலை நேரங்களில் பிரார்த்தனை மற்றும்
வழிபாடு. நடத்திடவும்.
2. மே மாதம், மாதா வணக்கமாதம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
3. ஊர்க்கூட்டங்கள் நடத்தவும் பயன்படுத்தப்பட்டது 1940-ம் ஆண்டு முதல் சங்கைக்குரிய ரிச்சர்டு சுவாமியவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. ஆகஸ்டு மாதத்தில் திருவிழா நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் திருப்பலி நடைபெற்றது. 1947-1951-ல் சங்கைக்குரிய அம்புரோஸ் சுவாமியவர்களால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது, இதனால் திருமணம் மற்றும் இதர அருட்சாதனங்களும் நிறைவேற்றப்பட்டன. இதற்கு முன்பு அனைத்து அருட்சாதனங்களுக்கும் திருமணங்களுக்கும் குருசடி புனித அந்தோனியார் கோவிலுக்குத்தான் போக வேண்டும். ஊரின் மக்கள் தொகை அதிகரிக்கவே இரண்டாவது கோவிலும் போதுமானதாக இல்லை. எனவே வேறே பெரிய கோவில் ஒன்று கட்ட தீர்மானிக்கப்பட்டது.
மூன்றாம் கோவிலைக் கட்ட மூன்று இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதியாக, விளையாட்டு மைதானத்தின் அருகாமையில் அமைத்திட முடிவு செய்யப்பட்டது. கோட்டாறு ஆயர் மேன்மை தங்கிய Dr.ரோச் ஆஞ்ஞி சுவாமி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கியது. நிதி திரட்டுவதற்கு, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், பணம் (வரி) கொடுத்தல் வேண்டும், இல்லையெனில், கட்டுமானம் நடைபெறும் போது, வேலை செய்ய வேண்டும். பெருநிதி ஏற்பாடு செய்திட, மறவன் குடியிருப்பு மக்கள் "துக்கப்பாட்டு" பிற கத்தோலிக்க பங்குகளுக்குச் சென்று பாடி, நன்கொடை திரட்டினர். மற்றொரு வியப்பூட்டு செய்தி யாதெனில், கோவில் ஒன்பது கான்கிரீட் வளைவுகளால் நிறுத்தப்பட்டு தூண்கள் இல்லாமல் வடிவமைக்கப்பட்டு 40 அடி உயரத்தில் கட்டப்பட்டது. மேலும், மறவன் குடியிருப்பின் அருகிலுள்ள வேறு எந்தக் கோவிலும் இந்த மாதிரி கட்டப்படவில்லை. தொடக்கத்தில், கோவிலில் கோபுரம் 150 அடி உயரத்தில் கட்டத் திட்டமிடப்பட்டது. பின்னர், இறுதிக்கட்டத்தில், கோபுரத்தின் உயரம் மாற்றம் செய்யப்பட்டது. எனவே, கோவிலின் கட்டுமான வேலைகள் பகுதியாகவே நிறைவேற்றப்பட்டது. இந்தக் கோவில் புனித தஸ்நேவிஸ் மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. தஸ்நேவிஸ் மாதா என்னும் போர்த்துகீசியச் சொல்லுக்கு பனிமய மாதா (Our Lady of Snow) என்பதாகும்.
1954, டிசம்பர் 11-ஆம் நாள் காலை 6,30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேன்மை தங்கிய Dr.ரோச் ஆஞ்ஞி சுவாமி ஆயர் அவர்களால், சங்கைக்குரிய D.C. அந்தோணி, குருசடி, பங்குத்தந்தை முன்னிலையில் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பெற்றது. கோவில் திருவிழா கொடி ஏற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கொடிமரமாக முதலில் பாக்குமரம், பிறகு தேக்குமரம் இப்பொழுது கான்கிரீட் கோபுரம் பயன்படுகிறது. தொடக்க கால நாட்களில் கோயிலில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் மற்றும் மெழுகு வர்த்திகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர், கோயிலில் மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. 1962-ஆம் ஆண்டில், "துக்கப்பாட்டு", பாடி 14 பங்குகளில் ரூ.440/- நன்கொடை பிரித்து ஒலிபெருக்கிகள் வாங்கப்பட்டன. அதன் பின்னர், இடி தாங்கிகள். அன்பளிப்புகள் மூலம் பெறப்பட்டன.
கோவிலில் கோபுரத்தில் மெர்க்குறி விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த விளக்கு மறவன்குடியிருப்பினைச் சுற்றி சுமார் 2 கி.மீ சுற்றுக்கு ஒளிதரும் திறன் உண்டு.