logo
OUR LADY OF SNOWS – PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்
Tamil
Travancore Kingdom
திருவிதாங்கூர் பேரரசு

திருவிதார்கூர் என்பது வேநாடு அரசினை, வாரிசு முறையில் அடைந்த ஸ்ரீ மார்த்தாண்ட வர்மா மன்னருடன் தொடங்கி, அன்னார் ஆட்சி காலத்தில் 1729-1758, திருவிதாங்கூர் என்று விரிவடைந்த நாடு. இது, பெரும்பகுதியாகத் தென் கேரளாவையும், கன்னியாகுமரி மாவட்டத்தையும் தன்னகத்தே கொண்டு பத்மநாபபுரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற போர்களில் அவர், கொச்சிவரை உள்ளடக்கிய அரசுகளாம், ஆற்றின்கல், கொல்லம், காயம்குளம், கொட்டாரக்கரா மற்றும் அம்பலப்புழா ஆகியவற்றை போரில் வெற்றி கொண்டு தனது அரசுடன் சேர்த்துக் கொண்டார். திருவிதாங்கூர் - டச்சு மற்றும் கிழக்கு இந்தியா கம்பெனி ஆகிய அதிகார வர்க்கங்களுக்குள் 10-08-1741-ல் நடைப்பெற்ற குளச்சல் போரில், வெற்றி வாகை சூடி, டச்சு கப்பற்படைத் தலைவன் யுஸ்டாச்சின்ஸ் டிலன்னாய் என்பவரைச் சிறைப்பிடித்து, போர்க்கைதியாக்கி அவனையே பெரிய கப்பற்படைத்தலைவன் (வலிய கப்பீத்தான்) என்று நியமனமும் செய்தார். இதனால் டிலன்னாய் திருவிதாங்கூர் படையில், நவீன ஆயுதங்களைக் கையாள பயிற்சிக் கொடுத்து மேலும் வலிமையுறச்செய்தார். ஸ்ரீ கார்த்திகைத் திருநாள் இராமவர்மா (தர்மராஜா), 1758 முதல் 1798 ஆண்டு வரை அரசாட்சி செய்தார். 1791-ஆம் ஆண்டு, மைசூர் மன்னன் திப்புசுல்தான், திருவிதாங்கூர் மீது படை எடுத்தார். திருவிதாங்கூர் படைவீரர்கள், சுல்தானின் படைபலத்தாக்குதலை ஆறு மாத காலம் எதிர் கொண்டு, அன்னாரை 2 முறை தோற்கடித்த பிறகு மகாராஜா,பிரிட்டீஷ் கிழக்கு இந்தியா கம்பெனிக்கு முறையிட்டு உதவி கோரியதால், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு வழி வகுத்தது. அவர், பத்மநாபபுரத்திலிருந்த தலைநகரை, திருவனந்தபுரத்திற்கு 1795-ல் மாற்றினார். 1798ல், க்ஷ பாலராமவர்மா அரியாசனத்தில் அமர்ந்தார், அப்போது வேலுத்தம்பி திவானாக (முதல் மந்திரி) பதவி பெற்றார். 1809-ஆம் ஆண்டு, வேலுத்தம்பி மற்றும் கொச்சின் அமைச்சர் பாலியத் அச்சன், ஆங்கிலேயர்களை எதிர்த்து, புரட்சி நடத்தினர், அதில் வெற்றி கிட்டவில்லை. ஆங்கிலேயர், வேலுத்தம்பியை, நாகர்கோயில் மற்றும் கொல்லம் ஆகியவற்றில் நடந்த சண்டையில், தோற்கடித்தனர். திருவிதாங்கூரின் படையணியின் நாயர் பிரிவு, படைக்கலன்களை இழக்க நேரிட்டது. 1810-ல் மீதியிருந்த படையும், வேலுத்தம்பியின் விவேகமற்ற புரட்சிக்குப் பின்னர் திருவிதாங்கூர் சாம்ராஜ்யம் நிராயுதபாணியாக ஆக்கப்பட்டது.

இராணி கெளரி லட்சுமி பாய், 1810-1815-ல், ஆங்கிலேயரின் ஆசியுடன் அரியணையில் அமர்ந்தார், அன்னாருக்கு ஒரு மகன் பிறக்கவே, 1813-ல் அரசராக பிரகடனப்படுத்தப்பட்டு, 1815-ல் இராணி கெளரி லட்சுமி பாய் இறந்த பின்னர், மகாராணி கெளரி பார்வதி பாய், அரசனின் இளவயது காரணமாக நாட்டினைப் பதிலிக்கு ஆள்பவர் என்ற முறையில் தொடர்ந்து ஆட்சி செய்தார். 1829-ஆம் ஆண்டு, ஸ்ரீ சுவாதி திருநாள் இராமவர்மா, அரியாணையில் அமர்ந்து 1846-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். அடுத்தாற் போல், மகாராஜா உத்தராடம் திருமால் மார்த்தாண்ட வர்மா (1847-1860), 1853-ம் ஆண்டு தனது ஆட்சியில் தனது நாட்டில் அடிமைத் தனத்தை ஒழித்தார். மற்றும், சில வகுப்பு மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த உடையணியும் கட்டுப்பாட்டினையும் நீக்கினார். இதைத் தொடர்ந்து, ஸ்ரீ ஆயில்யம் திருநாள் 1860-1880 ஆண்டு வரையும், மற்றும் ஸ்ரீ இராமவர்மா விசாகம் திருநாள் 1880-1885 ஆண்டு முடிய சிறப்பாக ஆட்சி செய்தார். ஸ்ரீ மூலம் திருநாள் ஸ்ரீ இராமவர்மா 1885-1924 வரை ஆட்சி செய்த போது, பல கல்லூரிகளும் பள்ளிக்கூடங்களும் நிறுவப்பட்டன. பின்னர், சேதுலட்சுமி பாய், ரீஜெண்டாக 1924-1931 வரை, ஆட்சி செய்தார். இவர் 12.11.1936ம் நாள், இந்துக்கள் அனைவரும் கோயிலில் நுழைந்து வணங்கிட (Temple Entry Proclamation) அதிகார பூர்வமாக ஆணை பிறப்பித்தார். இதனால் கேரளாவில் இருந்த அனைத்து இந்து கோயில்களும், அதுவரை உயர்வகுப்புச் சாதி மக்களுக்கு மட்டுமே இருந்த உரிமை, இந்துக்கள் அனைவருக்குமே திறந்து விடப்பட்டன.

ஆங்கில அரசு, இந்தியாவிற்கு விடுதலை அளிக்க முடிவு செய்த போது, திவான் சர்.சி.பி. இராமசாமி அய்யர், திருவிதாங்கூர் ஒரு சுதந்திர நாடாகவே இருக்கும் என்று விளம்புகை செய்தார். இந்திய தேசீய காங்கிரஸ் மற்றும் திவான். சர்.சி.பி.இராமசாமி அய்யர், ஆகியோரிடையே இருந்த, கடுமையான மனத்தாக்கின் காரணமாக, நாட்டில் பலவிடங்களில் புரட்சி ஏற்படலாயிற்று. இத்தகைய புரட்சி ஒன்று. புன்னப்பரா - வயலாறு எனும் இடத்தில் 1946-ல் வெடித்தது, அதில் கம்யூனிஸ்டுகள் தமது சொந்த அரசை அந்தப்பகுதியில் ஏற்படுத்தினர். இது, திருவிதாங்கூர் படையினரால் மிருகத்தனமாக நசுக்கப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்தனர். இது, மேலும் அமைதியின்மைக்கு வழிவகுத்ததில், சர்.சி.பி. இராமசாமி அய்யரின் தவறான போக்கு என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதன் விளைவாக சர்.சி.பி. இராமசாமி ஐயரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவே, அதைத் தொடர்ந்து திரு. P.G.N.உன்னித்தான் திவான் (முதல் மந்திரி) ஆனார். அதன்பிறகு, மகாராஜா. இந்தியாவுடன் சேர்ந்து கொள்ள இணக்கம் தெரிவிக்கவே, திருவிதாங்கூர், இந்திய யூனியனுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.

1949, ஜூலை 1-ஆம் நாள், திருவிதாங்கூர் - கொச்சி மாநிலம் ஏற்படுத்தப்பட்டு, அதனால், திருவிதாங்கூர் மன்னர் புதிய மாநிலத்தின் "இராஜப்பிரமுக்", பதவி ஏற்றார். அப்போது "திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்" குமரித்தந்தை திரு. மார்ஷல் நேசமணி என்பவரால், உருவாக்கப்பெற்று, அவர்தம் திருகுஞ்சன் நாடார் தலைமையில், தென் திருவிதாங்கூர் தமிழ் பேசும் பகுதி, அருகிலுள்ள சென்னை மாநிலத்தோடு இணைந்திட இயக்கம் நடைபெற்றது. இந்தப்போராட்டம், வன்முறைக் கலவரமாக மாறிடவே, காவலர்கள் மற்றும் பல உள்ளூர் மக்கள், மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடை ஆகிய இடங்களில், கலவரத்தின் போது கொல்லப்பட்டனர்

மாநில மறுமுறை திருத்தி அமைத்தல் சட்டம், (State Re-organisation Act of 1956) கீழ், திருவிதாங்கூரின் நான்கு தாலுகா பகுதிகளாம், தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு மற்றும் செங்கோட்டையின் ஒருபகுதி, சென்னை மாநிலத்தோடு இணைக்கப்பட்டது. 1971, ஜூலை 31, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 26-வது திருத்தத்தின்படி மகாராஜாவிற்கிருந்த, மன்னர் மானியம் (தகுதி மற்றும் சலுகைகள்) பறிக்கப்பட்டு விட்டது. இம்மன்னர் 1991-ஜூலை 19-ஆம் நாள் காலமானார்.

ஸ்ரீ உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, இப்போது உள்ள திருவிதாங்கூர் மகாராஜா, 1991-ஆம் ஆண்டிலிருந்து மற்றும் இவர், திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் தலைவருமாவர், இவர் இரண்டு வயதிலேயே இளையராஜாவாக, திருவிதாங்கூர் வாரிசுச்சட்டத்தின்படி அறிவிக்கப்பட்டார்.